இழப்புக்களும், ஏமாற்றுக்களும், துரோகங்களுமே தமிழர்களின் வரலாறாக இருக்கக் கூடாது, இருக்கவும் முடியாது
Wednesday, February 12, 2014
கன்னியா வெந்நீர் ஊற்று அந்தியேட்டி மடம் பேரினவாதத்தின் கபளிகாரமா? சொந்த இனத்துரோகிகளின் காட்டிக்கொடுப்பா?
பி.எஸ்.குமாரன்
கன்னியா வெந்நீரூற்றுடன் தொடர்புடைய தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று உரிமைகளை மறுதலிக்கும் வில்கம் விகாரை பௌத்த பிக்குவின் திரிபுபடுத்தப்பட்ட வரலாற்றை திணிப்பதற்க்கு வசதியாக 2012ஆம் ஆண்டளவில் கன்னியா பிரதேசத்தில் புதிதாக பௌத்த விகாரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இத்தேவைக்காக ஒரு ஏக்கர் நிலப்பரப்பு திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தினால் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்புகளில் ஓன்றும் இராவணமன்னனுடைய வரலற்றுடன் நெருங்கிய தொடா்புடையதும் சைவசமய மக்கள் இறந்தவா்களின் 31ஆம் நாள் அந்தியேட்டி கிரிகைகளை கன்னியா வென்நீரூற்று பிரதேசத்தில் நிறைவேற்றிவருவது ஐதீகம்.சிரிமான் சண்முகம்பிள்ளை அவா்கள் சைவசமயத்தவா்களின் தேவைகருதி தனக்கு சொந்தமானதும் கன்னியா வெந்நீரூறுக்களை அண்மித்ததுமான ஏழு(7) ஏக்கா் நிலப்பரப்பில் விசாலமான அந்தியேட்டி மடம் ஒன்றை நிர்மாணித்து இந்துக்களின் பாவனைக்கு விட்டிருந்தார். தற்போது அந்தியேட்டி மடத்துக்குரித்தான நிலப்பரபபு கபளீகாரம் செய்யப்பட்டு அந்தியேட்டி மடத்திற்குப் பதிலாக யாத்திரிகா் தங்குமடம் ஒன்றை நிர்மாணிக்கும் முயற்சியில் தொல்பொருள் ஆய்வு திணைக்களம் ஈடுபட்டிருப்பதாக அறியமுடிகிறது. எஞ்சிய நிலத்தை திருகோணமலை தமிழா்களின் பூர்வீக அடையாளங்களுக்குரிய சான்றுகளை உறுதிசெய்யும் நிலபுலங்களை ஏப்பம்விட்டு தம்மை வளப்படுத்திக் கொள்ளும் சொந்த இனத்துரோகிகளின் கபளிகாரத்திற்கு இலக்காகியுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறாக திருகோணமலையில் தமிழா்களின் வரலாற்று உரிமையை பறை சாற்றும் பிரதான அடயாளங்களில் ஒன்றான கன்னியா வெந்நீரூற்று பிரதேசமும் அதனோடிணைந்த தமிழா்களின் வரலாற்று சான்றுகளும் எவ்விதமான எதிர்ப்புகளுமின்றி தமிழ் தலைமைகளின் மௌன அங்கீகாரத்துடன் பறிபோயுள்ளது.
பல்லாண்டுகால வரலரற்றைக் கொண்ட கன்னியா வெந்நீரூற்றுப்பகுதியில் கன்னியா பிள்ளையார் ஒரு தசாப்த காலத்திற்க்கும் மேலாக அகதியாக காட்சி தரும் அவலம்
2012ஆம் ஆண்டளவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையையே படத்தில் காண்கிறீர்கள்
கன்னியா வரலாற்றுச் சுருக்கம்!
இராவண மன்னன் தனது தாயார் சிவபதமடைந்ததாக செய்தியறிந்து அன்னாரது 31ஆவது நாள் அந்தியேட்டி கிரிகை செய்வதற்காக தனது வாளால் நிலத்தில் ஏழு இடங்களில் குத்தியதில் உருவாகியதே கன்னியா வெந்நீர்ஊற்றுக்கள் என்பது வரலாறு. இவ்வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே இந்துக்கள் சிவபதமடைந்த தமது உறவுகளின் 31ஆம் நாள் அந்தியேட்டி கிரிகையை கன்னியா வெந்நீர்ஊற்று பிரதேசத்தில் நிறைவேற்றி வருவது ஐதீகம்.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த ஆங்கில அதிகாரி பொப்பளிப்பான் நோயால் அவஸ்தைப்பட்ட சந்தர்ப்பத்தில் திருகோணமலை மாரியம்மன் கோவில் பூசகர் அம்பாளின் அனுக்கிரகத்தால் அவரை குணப்படுத்தியதற்காக அவர் மாரியம்மன் கோவிலுக்கு சன்மானமாக 1827இல் கன்னியா வெந்நீர் ஊற்றுக்களை உள்வாங்கியதாக 17 ஏக்கர் நிலத்தை வளங்கியிருந்தமை வரலாறு. அன்றில் இருந்து கன்னியா வெந்நீர் ஊற்றுக்களினதும் அதனோடிணைந்த பிள்ளையார் கோவிலினதும் பரிபாலனம் திருகோணமலை மடத்தடி மாரியம்மன் கோவில் மணியகாரர் களால் நிர் வகிக்கப்பட்டு வந்தது.
கன்னியா வென்நீர் ஊற்றுக்களில் பக்தர் கள் நீராட தயாராகும் காட்சி
கன்னியா பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்ட பஸ்தரிப்பு போன்ற அந்தியேட்டி மடம்
கன்னிய பிரதேசசபையினால் நிர்மானிக்கப்பட்ட பஸ்தரிப்பு போன்ற அந்தியேட்டி மடம்
கன்னியா பிள்ளையார் கோவில் காட்டிக்கொடுப்பு!
திருவாட்டி தங்கம்மாள் சண்முகம் அவர்களால் சண்முகா நம்பிக்கை நிறுவனத்தின் நம்பிக்கை பொறுப்பாளார் சபை உறப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவரான கிறிஷ்ணதாசன் திருவாட்டி ச.தங்கம்மாளின் மறைவுக்குப்பின்பதாக கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவில் சண்முகா நம்பிக்கை நிவனத்துக்கு உரித்தான சொத்தென உரிமை கோரியதன் விளைவாக விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் பிள்ளையார் கோவில் திருகோணமலை மடத்தடி மாரியம்மன் கோவிலுக்கே சொந்தமானது என்பது நீதிமன்றினால் உறுதிசெய்யப்பட்டது.இதனால் ஏமாற்றமடைந்த கிறிஷ்ணதாசன் இயற்கை நீரூற்றுக்கள் சட்டத்திற்கமைய கன்னியா வெந்நீரூற்றுக்களுக்கு மாரியம்மன் கோவில் உரிமை கொண்டாட முடியாது வெந்நீரூற்றுக்களை .அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என பெட்டிசன் மூலம் வலியுறுத்தியதைத் தொடர்ந்து அரசாங்கம் வெந்நீர் ஊற்றுக்களை அரச உடமையாக பிரகடனப்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக மாரியம்மன் கோவில் மணியகாரரும் மற்றும் திருகோணமலையை சேர்ந்த சைவசமய ஆர்வலர்களும் சைவசமய மக்களின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த கன்னியா வெந்நீர் ஊற்றுக்களை மாரியம்மன் கோவிலுக்கு மீளவும் ஒப்படைக்க வேண்டும் என அன்றைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவிடம் கோரினர். இக்கோரிக்கையை கவனத்தில் கொண்டு பொருத்தமான தீர்வொன்றை தருவதாக பிரதமர் தெரிவித்திருந்ததாக தெரியவருகிறது. இதுநடந்த குறுகியகாலத்தில் திரு.பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்டதனால் இவ்விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. திரு.பண்டாரநாயக்கா அகால மரணம் அடையாதிருந்தால் கன்னியா வெந்நீரூற்றுக்கள் விவகாரத்தில் சைவசமய மக்களுக்கு ஏதாவதொரு வகையில் நிவாரணம் கிடைத்திருக்கக்கூடும் என எதிர்பார்த்ததாக சம்மந்தப்பட தரப்புடன் தொடர்புடைய வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
1918ஆம்ஆண்டுநிலஅளவை சண்முகா நம்பிக்கை நிறுவன ஸ்தாபகர் திணைக்களம் வெளியிட்ட கன்னியா திருவாட்டி. சண்முகம் தங்கம்மாள்
பிரதேசத்தின் வரைபடத்தின் அந்தியேட்டி மடம் அடையாளம் காட்டப்பட்டிருக்கும் காட்சி.
அந்தியேட்டி மடம்!
சைவசமயத்தவர்கள் சிவபதமடைந்த தமது உறவுகளின் அந்தியேட்டி கிரிகைகளை செய்வதற்க்கு வசதியாக திருகோணமலை தம்பலகாமம் கிராமத்தை சேர்ந்த பெரும் தனவந்தர் திருவாளர் சிற்றம்பலம் சண்முகம்பிள்ளை அவர்கள் தனக்கு சொந்தமானதும் கன்னியா வெந்நீரூறுக்களை அண்மித்ததுமான ஏழு(7) ஏக்கர் நிலப்பரப்பில் விசாலமான அந்தியேட்டி மடம் ஒன்றை நிர்மாணித்து இந்துக்களின் பாவனைக்கு விட்டிருந்தார்,அத்துடன் அவர் வாழ்ந்த காலத்தில் அந்தியேட்டி கிரிகைகள் செய்வதறகாக மடத்தை பயன்டுத்துவதற்கு வாடகை அறவிடுவதில்லை. அதுமட்டுமன்றி கன்னியா அந்தியேட்டி கிரிகைகளை செய்துவந்த திருகோணமலை ஆலடிபிள்ளையார் கோவில் சைவக்குருக்களை கௌரவித்து ஆலடிப்பிள்ளையார் கோவிலுக்கு வருடத்தில் ஒருமாத பூசைக்குரிய செலவுகளை தான்பெறுப்பேற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அன்னாரின் மறைவுக்குப்பின் அவரது பாரியார் திருவாட்டி தங்கம்மாள் அவர்களால் நிறுவப்பட்ட “சண்முகா நம்பிக்கை நிறுவனம்” என்னும் தர்மஸ்தாபனத்துடன் கன்னியா அந்தியேட்டி மடமும் உள்வாங்கப்பட்டதுடன் மடத்தை பராமரிக்கும் செலவுகளுக்கும் ஆலடி பிள்ளையார் கோவிலின் ஒருமாத செலவீனமும் சண்முகா நம்பிக்கை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. திருவாட்டி. ச.தங்கம்மாளின் மறைவுக்குப்பின் நம்பிக்கை பொறுப்பாளார் சபை உறுப்பினர்களில் ஒருவரான கிறிஷ்ணதாசனின் தான்தோன்றித்தனமான சுயநல நடவடிக்கைகளால் அதிருப்தியுற்ற ஏனைய நம்பிக்கை பொறுப்பாளர் சபை உறுப்பினர்கள் தமது பொறுப்புகளில் இருந்து ஒதுங்கிக்கொண்டனர். நடைமுறைக்கு மாறாக அந்தியேட்டி மடத்துக்கு வாடகை பெறுவதில் அக்கறை செலுத்திய கிறிஷ்ணதாசன் மடத்தை பராமரிப்பதில் அக்கறை செலுத்தவில்லை இதன் காரணமாக நாளடைவில் அந்தியேட்டி மடம் படிப்படியாக பழுதடையத் தொடங்கியது. இவ்வாறான சூழலில் உள்நாட்டு யுத்தமும் மடத்தை முற்றாக பாழடைந்த மண்டபமாக்கியது.யுத்தம் காரணமான இராணுவகெடுபிடிகள் தமிழ் மக்களை கன்னியா பகுதிக்கு செல்வதை தடுத்திருந்தது. இந்தச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பட்டணமும் சூழலும் பிரதேச சபையினர் அந்தியேட்டி மடத்தை இருந்த இடமே தெரியாமல் தரைமட்டமாக்கியதுடன் அந்தியேட்டி மடத்துக்கு மாற்றீடாக பேருந்து நிலையத்தை ஒத்த சிறுகட்டிடம் ஒன்றை அமைத்து பாவனைக்கு விட்டுளனர். பட்டணமும் சூழலும் பிரதேச சபையினரின் இச்செய்கையானது திருகோணமலையில் தமிழர்களின் வரலாற்றடை யாளங்களை துவம்சம் செய்வதில் குறியாக செயல்படும் பேரினவாதிகளுக்கு மறைமுகமாக உதவிய செயற்பாடாகவே கருதவேண்டும். சொந்த இனத்துரோகிகளின் துரோகங்களை தட்டிக்கேட்டு தடுத்துநிறுத்த திராணியற்ற திருகோணமலை தமிழர்கள் துரோகங்களை சகித்துக்கொள்ள பழகிவிட்டனர்.
கன்னியா பிரதேச சபையினரால் புள்டேசர்களால் தகர்த்தொழிக்கப்பட்ட கன்னியா அந்தியேட்டி மடத்தின் சிதைந்த காட்சியையே படத்தில் காண்கிறீர்கள்.
இந்தத் துரோகத்தனமான காட்டிக்கொடுப்பை செய்தவர்கள் பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் அனறைய உயர்அதிகாரியான தமிழராகும். இக்கைங்காரியத்தின் பின்னணியில் தமிழர்களுக்கு சொந்தமான பொதுச் சொத்துக்களையும் கோவில் செத்துக்களையும் ஏப்பம் விடுவதில்கைதேர்ந்தவனும் கிறிஷ்ணதாசனுடன் கைகோர்த்து செயல்பட்டவருமான பொறியிலாளர் ஒருவர் உந்து சக்தியாக செயல்பட்டதாக திருகோணமலையில் பரவலாக பேசப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி அந்தியேட்டி மடம் இருந்த இடத்தில் புதைபொருள்ஆராய்ச்சி திணைக்களம் யாத்திரிகர்கள் தங்குமடம் ஒன்றை நிர்மாணிக்க தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது எஞ்சிய நிலப்பரப்பின் ஒருபகுதியில் கிறிஷ்ணதாசனின் உறவினர் என உரிமை கோரிக்கொண்டு சாம்பல்தீவை சேந்த ஒருரே சிறுகடை ஒன்றை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.மிகுதி நிலப்பரப்பில் பொறியிலாளாளர் பினாமியின் பெயரால் உல்லாச விடுதியொன்றை நிர்மாணிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரியவருகிறது. 30 வருடகால விடுதலைப் போராட்டம் திருகோணமலை தமிழர்களின் வரலாற்று உரிமைகளையும் அடையாளங்களையும் துவம்சம் செய்வதில் பௌத்த சிங்கள பேரினவாதத்தையும் விஞ்சி நிற்பதற்கான பிரதான சாட்சியங்களில் கன்னியா வெந்நீருற்று பிரதேசத்தின காட்டிக்கொடுப்பும் ஒன்றாகும்.
புனர்வாழ்வு அமைச்சராக அமரர் அஷ்ரப் அமைச்சராக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் திருகோணமலை மாவட்டத்தில் யுத்தத்தால் சேதத்துக்குள்ளான இந்து ஆலயங்கள் சிலவற்றின் புனர் நிர்மாணத்துக்கு நிதி வழங்கியிருந்தார் இந்தச்சந்தர்ப்பத்தில் கன்னியா பிள்ளையார் கோவிலுக்கும் நிதி வழங்கப்பட்டதாகவும் இவ்விதமாக வளங்கப்பட்ட நிதி தவறான தகவலின் அடிப்படையில் தவறான தரப்பு சுருட்டிக்கொண்டதாக நம்பிக்கையான வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த துரோகக் கும்பலின் ஏவுதல் காரணமாகவே வில்க்கம்விகாரை பிக்கு கன்னியா பிள்ளையார் கோவில் புனர் நிர்மாணப்பணிகளை தடுப்பதற்கான பிரதான காரணியாகும். தற்போதைய நிலவரப்படி கன்னியா வெந்நீர் ஊற்றுக்களுக்கான பாதை புதிதாக அமைக்கப்பட்ட பௌத்தவிகாரையூடாக மாற்றப்பட விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்செயற்பாட்டின் மூலம் தமிழர்களுக்கும் கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசத்துக்கும் உள்ள வரலாற்று தொடர்பு முற்றாக அறுத்துவிடப்படும் ஆபத்து காணப்படுகிறது.
கடந்த ஒருதசாப்த காலத்திற்க்கும் மேலாக ஈழத் தமிர்களின் வரலாற்று அடையாளங்களில் ஒன்றான கன்னியா வென்நீர் ஊற்று பிரதேசம் படிப்படியாக பறிபோய்க்கொண்டிருக்கும் நிலமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கண்டும் காணாதவர்களாகவே இருந்துவருகின்றனர்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்மந்தன் கன்னியா பிள்ளையார் கோவில் புனர் நிர்மாணம் தடுக்கப்பட்டு ஒரு தசாப்த காலத்தை தாண்டியநிலையிலும் இவ்விவகாரத்தில் அக்கறையற்றவராக காணப்படுவதானது திருகோணமலை தமிழர்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நீங்களும் ஆன்லைன் முலம் வருமானம் பார்க்க ஆசை உள்ளவரா கவலைய விடுங்கள் இலவசமா பயிற்ச்சி எடுங்கள் உங்களுடைய ஆசையை நிறைவு செய்து கொள்ளுங்கள் இன்றே கிழே உள்ள இணையதளத்திற்கு சென்று உங்கள் தேவைகளை நிறைவு செய்து கொள்ளுங்கள்
ஆன்லைன் வேலை இலவச பயிற்ச்சிகள்
Post a Comment